பினாங்கைச் சேர்ந்த திரு.பிரகாஷ் மற்றும் அவரது துணைவியார் திருமதி புனிதா ஆகிய இருவரும் கடந்த 10 வருடங்களாக  இந்தியர் மரபியல் சார்ந்த பழம்பொருள்களை திரட்டி வருகின்றனர். இதுவரையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பழம்பொருட்கள் அவர்களின் கைவசம் உள்ளன. அதிலும் குறிப்பாக மலாயா இந்தியர்கள் காலனித்துவ ஆட்சியின்போது பயன்படுத்திவந்த பல்வகை அரிய பொருள்கள் அவர்களின் கைவசம் அதிகம் உள்ளன. அதுபோக பெரனாக்கான் சமூகத்தைச் சார்ந்த ’டிஃபன்’ தூக்குச் சட்டிகள் மலேசியாவிலேயே அதிகம் இவர்களின் தனிப்பட்ட சேகரிப்பில்தான் உள்ளன என அண்மையில் மலேசிய சாதனை புத்தகம் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 10 வருடங்களில் இத்தம்பதியினர் தங்களுடைய தனிப்பட்ட திரட்டில் உள்ள பழம்பொருள்களை ஆங்காங்கே தமிழர் விழாக்களில் காட்சி பொருளாக வைப்பதுண்டு. மேலும் தேசிய அருங்காட்சியகமும், பினாங்கு மாநில அருங்காட்சியகமும் இணைந்து இவர்களின் தூக்குச் சட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக பினாங்கு அருங்காட்சியகத்தில் ஒரு மாத காலம் காட்சிக்கு வைத்திருந்தது பெருமைப்படக் கூடிய விடயமாகும்.

இதுநாள்வரையில் இவர்களுடைய அனைத்து திரட்டுகளும் 750 சதுர அடி அகலம் கொண்ட ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்தான் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும்  மலேசிய இந்தியர்களுக்கென்று ஒரு தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதே இத்தம்பதியினரின் நீண்டநாள் கனவாகும். அதற்கான பல்வேறு முயற்சிகளில் அத்தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். தற்போது பினாங்கு அறப்பணி வாரியத்தின் உதவியின் மூலம் அவர்களின் கனவு கனிந்திருக்கிறது.

பினாங்கு மெக்கலிஸ்டர் சாலையில் அமைந்துள்ள இந்து அறப்பணி வாரிய வளாகத்தின் ஒரு பெரிய அறையில் ‘இந்திய மரபியல் அருங்காட்சியகம்’ தொடங்கப்படவுள்ளது. தற்சமயம் இத்தம்பதியினரின் திரட்டில் உள்ள 80 சதவிகித பழம்பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர். மலாயா இந்தியர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்திவந்த கலாச்சார, சமய, வணிக, சமையல், போக்குவரத்து, பொழுதுபோக்கு, விளையாட்டு என பலதரப்பட்ட பொருட்களை இங்கே காணலாம்.

அதன் திறப்புவிழா எதிர்வரும் மே மாதம் 1-ஆம் திகதியன்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையில் அரங்கேறவுள்ளது.

முதற்கட்டமாக வாரத்தில் மூன்று நாட்கள் (சனி,ஞாயிறு மற்றும் புதன்) கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு இலவசமாக இவ்வருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. வரலாற்று விழிப்புணர்வை நம் சமூகத்தினிடையே மேலோங்கச் செய்யும் இம்முயற்சிக்கு பொதுமக்கள் வற்றாத ஆதரவினை வழங்குமாறு அருங்காட்சியக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்..

சமூகம் பயன்பெறப்போகும் இம்மகத்தான பணிக்கு அடித்தளமிட்ட திரு.பிரகாஷ், திருமதி புனிதா ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.

Comments